ஆன்லைனில் ஆர்டர் செய்த இ-ஸ்கூட்டருக்கு கூடுதலாக 15 ஆயிரம் திர்ஹாம் கொடுத்த போலந்து வாலிபர்- கடைசியில் நடந்த டுவிஸ்ட்
- தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
- பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார்.
துபாய்:
துபாயில் குடியேறுவதற்காக போலந்து நாட்டைச் சேர்ந்த கஜேதன் ஹப்னர் என்ற வாலிபர், பெண் தோழியுடன் வந்தார். புதிதாக வீடு தேடிக் கொண்டிருப்பதால், தற்காலிகமாக துபாய் மரினா பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினர். அவர்கள் அப்பகுதியில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கும் வகையில் இ-ஸ்கூட்டர் ஒன்றை வாங்க அந்த வாலிபர் திட்டமிட்டு, இணையதளத்தில் தேடினார்.
அப்போது தனியார் நிறுவனம் ஒன்று 1,750 திர்ஹாமில் இ-ஸ்கூட்டரை விற்பனை செய்வதாக அறிவித்து இருந்தது. இதனை கஜேதன் ஹப்னர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். அதில், பொருளை டெலிவரி செய்யும் போது பணத்தை தருவதாக குறிப்பிட்டார்.
இந்த இ-ஸ்கூட்டரை டெலிவரி செய்வதற்காக அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது மோசின் நசிர் என்ற டெலிவரி ஊழியர் நேரில் சென்றார். அதனை பெற்றுக் கொண்ட கஜேதன் ஹப்னர் பணத்தை நசிரிடம் கொடுத்தார். அப்போது அவர் 1,750 திர்ஹாமுக்கு பதிலாக 17,050 திர்ஹாம் வழங்கினார். இதனை டெலிவரி ஊழியரும் எண்ணி பார்க்காமல் வாங்கி சென்றார். பின்னர் முகம்மது மோசின் நசிர் தினமும் பொருட்களை டெலிவரி செய்த பணத்தை எண்ணி பார்ப்பது வழக்கம். அன்று இரவில் அவர் பணத்தை எண்ணும் போது 15 ஆயிரம் திர்ஹாம் அதிகமாக இருப்பது தெரிந்தது.
இந்நிலையில் முகம்மது மோசின் நசிரின் தாயார் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். அப்போது இந்த விவரத்தை அவரிடம் தெரிவித்தார். அவரும் பணத்தை உடனடியாக கொடுத்தவரிடம் திருப்பி கொடுத்து விடு என தெரிவித்தார். இதற்கிடையே பொருளை வாங்கிய கஜேதன் ஹப்னர் தன்னிடம் இருந்த பணம் குறைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
அப்போது கஜேதன் ஹப்னர் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டெலிவரி ஊழியர் முகம்மது மோசின் நசிர் பேசினார். அப்போது, உங்களிடம் ஆன்லைன் பொருளுக்கு கூடுதலாக பணம் பெறப்பட்டது என விவரமாக கூறினார். அந்த பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார். பின்னர் மறுநாள் 15 ஆயிரம் திர்ஹாம் பணத்தை எடுத்து கொண்டு டெலிவரி ஊழியர், வெளிநாட்டு வாலிபர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்று நேரில் ஒப்படைத்தார்.
டெலிவரி இளைஞரின் நேர்மையை பாராட்டி அவருக்கு 300 திர்ஹாம் பரிசாக கஜேதன் ஹப்னர் வழங்கினார். டெலிவரி ஊழியர் அனுமதியுடன் போலந்து இளைஞரின் தோழி அவரது நேர்மையை கவுரவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியை பதிவாக வெளியிட்டார்.
தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.