ஜப்பானில் ரசாயன டேங்கர் கப்பல்- சரக்கு கப்பல் மோதல்
- சரக்கு கப்பலின் என்ஜின் பகுதியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது
- அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
டோக்கியோ:
ஜப்பானின் தென்மேற்கு கடற்பகுதியில் ரசாயன டேங்கர் கப்பலும் சரக்குக் கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து இன்று அதிகாலையில் நடந்துள்ளது என்று குஷிமோட்டோ கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
டேங்கர் கப்பலில் ஆறு ஜப்பானிய பணியாளர்களும், சரக்கு கப்பலில் 14 சீன பணியாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சரக்கு கப்பலின் என்ஜின் பகுதியில் இருந்து எண்ணெய் கசிந்ததாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் குஷிமோட்டோ கடலோர கவல் படையினர் கூறினார்கள்.
இரண்டு கப்பல்களும் வாகாயமா மாகாணத்தின் கடற்கரையில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டுள்ளது என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. விபத்து நிகழ்ந்தபோது, டேங்கர் கப்பலில் எந்த ரசாயனமும் ஏற்றப்படவில்லை. எனவே, மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ஜிபிஎஸ் பதிவுகள் ஆராயப்படுகின்றன. டேங்கர் கப்பல் தங்கள் கப்பலை நோக்கி திடீரென பாய்ந்து வந்ததாக சரக்கு கப்பல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.