குழந்தைகள் செல்போன்-டி.வி. பார்க்க சுவீடன் அரசு தடை
- பெற்றோரை நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
- 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை.
ஸ்டாக்ஹோம்:
குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை செல்போனை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோரை நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்.
6 முதல் 12 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு பார்க்கலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே செல்போன் மற்றும் தொலைக் காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்
குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன் செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். இரவில் படுக்கையறைக்கு வெளியே செல்போன் மற்றும் டேப்லெட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதார மந்திரி ஜாகோப் போர்ஸ்மெட் கூறும்போது, 13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணிநேரம் பள்ளி நேரத்திற்கு வெளியே செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறார்கள்.
மிக நீண்ட காலமாக, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் மீடியா குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நடவடிக்கைகள், உடல் செயல்பாடு, போதுமான தூக்கம் ஆகியவற்றிற்கு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்றார்.