உலகம் (World)

நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்

Published On 2024-06-26 04:37 GMT   |   Update On 2024-06-26 04:37 GMT
  • நிலவின் மண்-பாறை மாதிரிகளுடன் சாங் இ-6 என்ற விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரை இறங்கியுள்ளது.
  • கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும்.

பீஜிங்:

நிலவின் தென்துருவத்தில் இருந்து மண்-பாறை மாதிரிகளை கொண்டு வருவதற்காக சாங் இ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 2-ந்தேதி நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

நிலவின் தென் துருவத்தில் எய்ட்கென் படுகையில் தரை இறங்கிய விண்கலம், இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவி மூலம் நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரித்தது.

மேலும் நிலவு மேற்பரப்பின் சில புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. பின்னர் அந்த மாதிரிகள் நிலவை சுற்றி வந்த லேண்டருக்கு மாற்றப்பட்டு பூமிக்கு புறப்பட்டது.

இந்த நிலையில் நிலவின் மண்-பாறை மாதிரிகளுடன் சாங் இ-6 என்ற விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரை இறங்கியுள்ளது. சுமார் இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, இப்பணி நிறைவடைந்துள்ளது என்று சீனா தெரிவித்தது. விண்கலத்தில் இருந்த நிலவின் மாதிரிகளை விஞ்ஞானிகள் எடுத்து ஆய்வு கூடத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது என்றனர். இந்த திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News