பெற்றோருக்கு மகளாக பணியாற்றும் பெண் - மாத சம்பளம் ரூ. 47 ஆயிரம்!
- பெற்றோருக்கு மகளாக வாழ்வதற்கு ஒவ்வொரு மாதமும் 4 ஆயிரம் யுவான்களை நியானன் பெறுகிறார்.
- பெற்றோருக்கு முழு நேர மகளாக செயல்படும் நியானன், அவர்களுடன் தினமும் ஒரு மணி நேரம் நடனம் ஆடுகிறார்.
பெற்றோருக்கு மகளாக பணியாற்றுவதற்காக, தான் மேற்கொண்டு வந்த பணியை ராஜினாமா செய்த சீன பெண் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறார்.
சீனாவை சேர்ந்த 40 வயதான நியானன் செய்தி நிறுவனம் ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். 2022-ம் ஆண்டு பணியிடத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதால், ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இவரது மன அழுத்தம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. மேலும் பணியில் எந்நேரமும் ஈடுபாடுடன் இருக்க வேண்டிய அவசியம் இருந்து வந்துள்ளது.
இத்தகைய சவாலான சூழ்நிலையில், அவரது பெற்றோர் தலையிட்டு நியானனுக்கு உதவ முயற்சித்தனர். பொருளாதார ரீதியில் உதவி செய்வதாக பெற்றோர் நியானனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த நியானன், தான் மேற்கொண்டு வந்த பணியை ராஜினாமா செய்துவிட்டார்.
பெற்றோருக்கு மகளாக வாழ்வதற்கு ஒவ்வொரு மாதமும் 4 ஆயிரம் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 648 வரை சம்பளமாக வழங்க நியானன் பெற்றோர் முடிவு செய்தனர். நியானனின் பெற்றோருக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யுவான்கள் பென்ஷன் தொகையாக கிடைக்கிறது. இந்த தொகையில் இருந்து, 4 ஆயிரம் யுவான்களை நியானனுக்கு சம்பளமாக, அவரின் பெற்றோர் கொடுக்கின்றனர்.
கிடைக்கும் வருவாய்க்கு ஈடு செய்யும் வகையில் நியானன் தனது பெற்றோருக்கு செல்ல மகளாக இருந்து வருகிறார். பெற்றோருக்கு முழு நேர மகளாக செயல்படும் நியானன், அவர்களுடன் தினமும் ஒரு மணி நேரம் நடனம் ஆடுகிறார். இதுதவிர மளிகை சாமான் வாங்க கூட செல்கிறார். மாலை நேரங்களில் இரவு உணவு சமைக்க பெற்றோருக்கு நியானன் உதவியாக இருக்கிறார்.
இத்துடன் மின்சாதனங்கள் சார்ந்த பணிகளை மேற்கொள்வது, பெற்றோருக்கு ஓட்டுனராக இருப்பது, ஒவ்வொரு மாதமும் குடும்பமாக வெளியில் செல்லவும், சுற்றுலா செல்லவும் திட்டமிடுவது போன்ற பணிகளை நியானன் மேற்கொண்டு வருகிறார்.