திபெத்திய உறைவிட பள்ளிகளில் மாண்டரின் மொழியை திணிக்கும் சீனா
- கிராம பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் திபெத்திய மொழி கற்று தரப்பட்டது
- திபெத்திய அடையாளத்தையே சீனா, அழிக்க முயல்வதாக சமூகவியலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
திபெத்திய பீடபூமியின் (Tibetan plateau) பெரும் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு ஆசிய நாடு, திபெத். இந்நாடு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
திபெத்தின் கிராம பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திபெத்திய மொழியை கற்றுவித்து வந்தன.
ஆனால், இந்த முறையை மாற்றி, திபெத்தில் உறைவிட பள்ளி (boarding school) முறையை சீனா புகுத்தியது.
அங்குள்ள உறைவிட பள்ளிகளில் பயிற்சி மொழியாக இருந்த திபெத்திய மொழிக்கு பதிலாக சீனா, சீன மொழியை அப்பள்ளிகளில் கட்டாயமாக்கி உள்ளது.
எதிர்காலத்தில் இந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், சீனாவில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழியான மாண்டரின் (Mandarin) எனும் சீன ஆட்சி மொழியில் உரையாடவும், உயர் கல்வி கற்கவும் எளிதாக இருக்கும் என்று இதற்கு சீனா காரணம் கூறி வருகிறது.
"சீனாவின் உண்மையான நோக்கம் திபெத்திய அடையாளத்தை மிக குறைந்த வயது சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் மனதில் இருந்து அழிக்க முயல்வதுதான். இந்த நோக்கத்திற்கு சீனா கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. பாடத்திட்டத்தை இவ்வாறு மாற்றியமைத்துள்ளதன் மூலம் ஒரு நாட்டின் மக்கள் தொகை முழுவதும், எதிர்காலத்தில், தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் மறக்கும் நிலை தோன்றி விடும்" என திபெத்தை சேர்ந்த சமூகவியலாளர் கூறினார்.
உறைவிட பள்ளிகளில் தங்கியிருந்து வீடு திரும்பும் போது தங்கள் தாய்மொழியை அக்குழந்தைகள் மறக்கும் நிலை ஏற்படுவதாக அங்குள்ள நிலைமையை நேரில் கண்ட சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திபெத்திய கலாச்சாரத்தை அழிப்பதில் சீனா ஈடுபட்டு வருவதாக நீண்டகாலமாகவே மனித் உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.