விடாமுயற்சிக்கு உதாரணம்: 27வது முறையாக பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதிய சீன கோடீஸ்வரர்
- பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, தனது வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
- மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.
சீன நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர் லியாங் ஷி (56). இவர் அந்நாட்டின் பல்கலைகழகங்களில் சேருவதற்கான கவ்கவ் என்ற பொது நுழைவுத் தேர்வை தொடர்ந்து பலமுறை எழுதியும் தோல்வியடைந்துள்ளார். எனினும் விடா முயற்சியுடன் மிகக்கடினமான இந்த பொது நுழைவுத் தேர்வை 27வது முறையாக எழுதினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இம்முறையும் லியாங் தோல்வி கண்டிருக்கிறார்.
மொத்தம் 750 புள்ளிகள் கொண்ட இந்த தேர்வில், தேர்ச்சிக்கு தேவையான குறைந்தளவு புள்ளிகள் 424. இதற்கு 34 புள்ளிகள் குறைவாக எடுத்து லியாங் தோல்வியடைந்தார்.
லியாங் ஷி, இந்த தேர்வில் வெற்றி பெற 1983ம் ஆண்டிலிருந்து பல முறை முயற்சி செய்து வருகிறார்.
தனது 16வது வயதில் 1983ம் வருடம் இந்த தேர்வில் முதல் முறையாக தோல்வி கண்ட லியாங், பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, பல இடங்களில் பல வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
90களின் மத்தியில் தனது சொந்த மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.
இந்த தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொள்ளும் காலங்களில், குடிப்பழக்கத்திலிருந்தும், தமக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடுவதிலிருந்தும் லியாங் விலகி இருப்பாராம்.
இந்த தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தன்னை பாதித்திருப்பதாகவும், அடுத்த வருடம் மீண்டும் முயற்சிப்பது சந்தேகம் எனவும் லியாங் கூறியுள்ளார்.
சீனாவில் பள்ளி முடித்து கல்லூரிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான, பிரபலமான இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். இந்த தேர்வை, இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.