நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் புயல்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி
- 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது.
- ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
வெலிங்டன் :
நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கடந்த திங்கட்கிழமை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அங்குள்ள ஹாக்ஸ் பே, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது.
புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அங்குள்ள நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததை தொடர்ந்து, மக்கள் பலரும் வீட்டின் மேற்கூரைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும்பாலான இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலியானதாகவும், பலர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த கேப்ரியல் புயல் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3-ல் 1 பங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறினார்.