மியான்மர் கடலோர பகுதிகளை சூறையாடிய மோக்கா புயல்: 60 பேர் பலி
- காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.
வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று முன்தினம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.
மோக்கா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு ஆதரவு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ரக்கினே மாநிலத்தில் மட்டும் 41 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.