பிறப்பு விகிதம் அதிகரிக்க மாணவர்களுக்கு ஆஃபர் அளித்த சீன கல்லூரிகள்
- சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது.
- கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல் குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அதன்படி, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதிக்கப்பட்ட சட்டம் 2015-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அரசு அனுமதி அளித்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது. இதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி சீன தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்பட நாடு முழுவதும் உள்ள விந்தணு தான கிளினிக்குகள் மாணவர்களை, சில விதிகளுக்கு உட்பட்டு விந்தணு தானம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா மற்றொரு முயற்சியில் இறங்கியது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிப்பது என்பதே அந்தத் திட்டம். அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்படி, பேன் மெய் கல்வி குழுமத்தின் மியான்யாங் பிளையிங் கல்லூரியானது, முதன்முறையாக கடந்த மார்ச் 21-ம் தேதி இந்த விடுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த நாளில் காதலில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, 9 கல்லூரிகளில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மாணவ, மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்துக் காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி உள்ளன.