டென்மார்க் பிரதமர் மீது திடீரென மர்ம நபர் தாக்கியதால் பரபரப்பு
- பொது வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
- இதை சற்றும் எதிர்பாராத அவர், இந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்தார்.
டென்மார்க் பிரதமராக மேட் ஃப்ரெடெரிக்சன் இருந்து வருகிறார். இவர் டென்மார்க்கின் மத்திய கோபென்ஹாகென்னில் சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். உடனே அந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என பிரதமர் அலுவலம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டென்மார்க் போலீஸ், பிரதமரை தாக்கிய நபரை கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவத்தில் பிரதமர் சற்று அழுத்தத்துடன் இருந்தார். பின்னர் பாதுகாப்பு வளையத்துடன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் தேர்தல் டென்மார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஸ்லோவாகிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.