உலகம்

தவறாக கைது செய்யப்பட்ட கர்ப்பிணி: வழக்கை எதிர்கொள்ளும் காவல்துறை அதிகாரி

Published On 2023-08-07 08:01 GMT   |   Update On 2023-08-07 08:34 GMT
  • பாதிக்கப்பட்டவரிடம் போட்டோவை காண்பித்து, அதன்மூலம் கைது நடவடிக்கை
  • கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒரு கர்ப்பிணி என, பாதிக்கப்பட்டவர் குறிப்பிடவில்லை என்பதால் சிக்கல் ஏற்பட்டது

அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள நகரம் டெட்ராய்ட்.

கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் சேர்ந்து தனது காரில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு அப்பெண் பலருடன் பேசினார்.

பிறகு அப்பெண்ணும் ஆணும் வேறொரு இடத்திற்கும் சென்றுள்ளனர். அந்த இடத்திற்கு அந்த பெண்ணுடன் பெட்ரோல் நிலையத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் வந்தனர். அங்கு அவர்களும், அப்பெண்ணும், அந்த ஆணை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடமிருந்த பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடித்தனர்.

இதனையடுத்து அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதற்கிடையே அந்த நபரின் செல்போன், அந்த பெட்ரோல் நிலையத்தில் 2 நாட்களுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கை லஷான்ஷியா ஆலிவர் (LaShauntia Oliver) எனும் அதிகாரி விசாரித்தார்.

பெட்ரோல் நிலையத்தில் செல்போனை ஒப்படைத்தது ஒரு பெண் என கண்டறிந்த ஆலிவர், அந்த பெண்ணை கண்டறிய பாதிக்கப்பட்ட நபரிடம், பல பெண்களின் புகைப்படங்களை காண்பித்தார். அதில் அந்த ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து பிப்ரவரி 16 அன்று, 2 குழந்தைகளுக்கு தாயான போர்ச்சா வுட்ரஃப் (32 வயது)  என்ற ஒரு கர்ப்பிணியை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், போர்ச்சா சுமார் ரூ.82 லட்சம் ($1,00,000) ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நடவடிக்கையினால் அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும்படி நேர்ந்தது.

பிறகு மார்ச் 6-ல் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட ஆண், தன்னிடம் கொள்ளையடித்த பெண் ஒரு கர்ப்பிணி என குறிப்பிட்டதாக காவல்துறை அறிக்கையில் இல்லை. எனவே தான் தவறாக கைது செய்யப்பட்டதை உணர்த்த இதுவே போதுமானது என்பதால் அந்த புலனாய்வு அதிகாரி மற்றும் காவல்துறை மீது போர்ச்சா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

"இது மிகவும் கவலைக்குரியது" என இது குறித்து டெட்ராய்ட் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

ஆனால், புலனாய்வு அதிகாரி ஆலிவர், இது பற்றி கருத்து எதுவும் கூறவில்லை.

வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்வதற்கு பதிலாக அவர் பெயர் கொண்ட ஒரு அப்பாவி பெண்ணை போலீசார் கைது செய்ததும், நீண்ட அலைக்கழிப்பிற்கு பிறகு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டதும் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News