வயது ஒரு பொருட்டல்ல.. திறமைதான் முக்கியம்: ஜோ பைடன் குறித்து டிரம்ப் கருத்து
- தேர்தல் நேரத்தில் பைடன் 82 நெருங்குவார்; டிரம்ப் 78 நிறைவு செய்வார்
- எனது பெற்றோர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தனர் என்றார் டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை நெருங்குவார் என்பதும் டிரம்ப் 78 வயதை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவில் வாக்காளர்களிடம் ஆங்காங்கே நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் பேட்டி காணப்படும் 3 பேரில் ஒருவர், ஜோ பைடனின் அதிக வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.
"ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர்; அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை" என இது குறித்து ஒரு பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இரண்டு போட்டியாளர்களும் மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.