உலகம்

துபாயில், 21 சதவீதம் பேர் 'ஸ்லீப் அப்னியா' நோயால் பாதிப்பு- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Published On 2024-08-29 03:49 GMT   |   Update On 2024-08-29 03:49 GMT
  • ஸ்லீப் அப்னியா மிதமானது முதல் கடுமையானது வரை பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  • ஸ்லீப் அப்னியா நோயில் இருந்து விடுபட படுக்கைக்கு செல்லும் முன்பாக மது அருந்தக்கூடாது.

துபாய்:

மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மருத்துவத்துறையில் ஸ்லீப் அப்னியா என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும்போது அவரது மேல் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரியாக தூங்க முடியாமல் போகிறது.

சில நேரங்களில் மூளையில் இருந்து தசைகளுக்கு சரியான சிக்னல்கள் செல்லாவிட்டாலும் ஸ்லீப் அப்னியா ஏற்படும். இந்த நோயால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு சரி செய்யாவிட்டால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் வரும்.

இந்த நோயின் கொடுமை என்னவென்றால் இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருப்பதே தெரியாமல் இருப்பதுதான். இதில் வெளியில் தெரியக்கூடிய அறிகுறிகளை கூட பெரும்பாலானோர் பெரிதாக கருதுவது இல்லை. ஸ்லீப் அப்னியா உள்ளவர்களுக்கு அதிகமான பகல் நேர தூக்கம் உண்டாகும். அதற்கு அடுத்த படியாக சத்தமான குறட்டையுடன் அயர்ந்து தூங்குவது ஆகும். மூச்சுத்திணறல், காலையில் தலைவலி அல்லது எரிச்சலான மனநிலை, வேலையில் கவனக்குறைபாடு, வாய் வறட்சி, இரவு முழுவதும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

ஸ்லீப் அப்னியா மிதமானது முதல் கடுமையானது வரை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் உயிரை பறிக்கும் அளவுக்கு செல்லலாம். இதனை கண்டறிய பாதிக்கப்பட்ட நபர் தூங்கும்போது நடத்தும் சோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது. இந்த நோய்க்கு சிபிஏபி என்ற தானியங்கி எந்திரத்தை பயன்படுத்தி தூக்கத்தின்போது மூக்கில் ஏற்படும் காற்றழுத்தத்தை சீராக வைத்து சுவாசப்பாதையில் மூச்சடைப்பு ஏற்படாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த ஸ்லீப் அப்னியா நோயில் இருந்து விடுபட படுக்கைக்கு செல்லும் முன்பாக மது அருந்தக்கூடாது. உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். புகைப்பிடித்தல் கூடவே கூடாது. துபாயில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் பாலின வேறுபாடின்றி துபாயில் வசிக்கும் 21 சதவீதத்தினரில் 51 வயது முதல் 60 வயதுடையவர்கள் ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறட்டை சத்தம் தாங்க முடியாமல் தங்கள் துணைகளை அழைத்து வருவோர் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் துணைவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம், மன இறுக்கம், ஸ்லீப் அப்னியா ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News