அபுதாபி இந்து கோவிலில் ஜெய்சங்கர்: இரு நாடுகளுக்கு இடையிலான கலாசார பாலம் என பெருமிதம்
- அபுதாபி இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் திறந்து வைத்தார்.
- அங்கு நிறுவப்பட்ட சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
அபுதாபி:
இந்திய பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து துபாய்–அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55,000 சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.
இதற்கிடையே, அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் திறந்துவைத்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள கடவுள் சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
இந்நிலையில், அபுதாபி இந்து கோவிலுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலுக்குச் சென்றதில் ஆசிர்வதிக்கப்பட்டேன். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்புறவின் புலப்படும் சின்னமாக இது உலகிற்கு ஒரு நேர்மறையான செய்தியை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோவில் இரு நாடுகளுக்கு இடையே ஓர் உண்மையான கலாசார பாலமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.