உலகம்

ஈக்வடார் நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் அதிபர் வேட்பாளர் படுகொலை

Published On 2023-08-10 08:31 GMT   |   Update On 2023-08-10 08:31 GMT
  • அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
  • தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார்.

குயிட்டோ:

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சி யோவும் ஒருவர் ஆவார்.

பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. ஈக்வடாரில் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பெர்னாண்டோ, பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் ஏறியபோது துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அதிபர் கில்லர்மோ லாஸ்சோ கூறும்போது, "இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் போகாது. குற்றவாளிகள் சட்டத்தின் முழு அளவை எதிர்கொள்ளாதவர்கள். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து ஆலோசித்து உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அவசர கூட்டத்திற்கு அழைத்து உள்ளேன்" என்றார்.

Tags:    

Similar News