EVM வாக்கு இயந்திரங்கள் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்- மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்
- மின்னணு வாக்கு இயந்திரங்களும் தபால் வாக்கு முறையும் முறைகேடுக்கான சாத்தியங்கள் அதிகம் கொண்டவை.
- நேரடியாக வந்து வாக்களிக்கும் முறையையும் கட்டாயப்படுத்துவது மட்டுமே தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்.
அதிரடியான கருத்துக்களுக்கு சொந்தக்காரரான உலக பணக்காரர் எலான் மஸ்க், இ.வி.எம் வாக்கு இயந்திரத்தில் முறைகேடுக்கான சாத்தியங்கள் அதிகம் என்று மீண்டும் தெரிவித்திருப்பது உலக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஸ்க், "மின்னணு வாக்கு இயந்திரங்களும் தபால் வாக்கு முறையும் முறைகேடுக்கான சாத்தியங்கள் அதிகம் கொண்டவை. வாக்குச்சீட்டுகளையும் நேரடியாக வந்து வாக்களிக்கும் முறையையும் கட்டாயப்படுத்துவது மட்டுமே தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கடந்த மாதம் எலாஸ் மஸ்க் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்காவை தாண்டி இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவை எளிதில் ஹேக் செய்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியது.