நேட்டோ அமைப்பில் நாளை இணைகிறது ஃபின்லாந்து - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது.
- நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக ஃபின்லாந்து தேசிய கொடி ஏற்றப்பட இருக்கிறது.
நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக ஃபின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் ஃபின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது.
"இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாரம். நாளை முதல், ஃபின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் ஃபின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். ஃபின்லாந்து பாதுகாப்பு, நார்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்," என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.
ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
"இது எங்களுக்கு பெருமை மிக்க தருணம் ஆகும். சந்திப்பின் போது, ரஷ்யாவின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு அதிக ஆதரவு அளிக்க நேட்டோவை வலியுறுத்துவதே ஃபின்லாந்துக்கு மிக முக்கிய குறிக்கோள் ஆக இருக்கும். ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பகுதி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் நினைக்கிறோம்," என்று ஹாவிஸ்டோ தெரிவித்துள்ளார்.