இடி, மின்னல், மழை: விமான நிலையம் மூடல்; தவிக்கும் பயணிகள்
- சுமார் 70 விமானங்களின் பயணம் ரத்தானது
- 25,000 மின்னல்களை வானிலை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்
மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி.
அந்நாட்டின் மாநிலமான ஹெஸ்ஸில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையம் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக செயல்படுவதால் இந்த விமான நிலையம், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும், ஓடுதளங்களிலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அங்கு வந்து தரையிறங்கிய விமானங்களிலிருந்து பயணிகள் இறங்கி, நிலையத்தை அடைந்து, தங்களின் அடுத்த பயண இலக்குகளை அடைய முடியாமல் தவித்தனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் விமான நிலைய தரை கட்டுப்பாட்டு சேவைகள் முடக்கப்பட்டது. சுமார் 70 விமானங்களின் பயணம் ரத்தானது. வழக்கமாக இரவு 11:00 மணியளவில் நிறுத்தப்படும் அன்றாட சேவை பணிகள், விமானங்கள் ரத்தானதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக நீண்டு கொண்டே சென்றது.
இதனால் தரையிறங்க வேண்டிய 23 விமானங்களின் வருகை மாற்றியமைக்கப்பட்டது. நிலையத்தை நெருங்கும் முன்பே பல விமானங்களுக்கு வானிலேயே இது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
சுமார் 1000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை ஹெஸ் மாநிலம் முழுவதும் ஜெர்மன் வானிலை அமைப்பால் விடுக்கப்பட்டுள்தால், இயல்பு நிலை திரும்புவதற்கு சில நாட்களாகும் என தெரிகிறது.
வானிலை அதிகாரிகள் ஒரு மணி நேர இடைவெளியில் அம்மாநிலம் முழுவதும் 25,000 மின்னல்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.