இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்
- கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் நாடு திரும்பினார்.
- பொருளாதார நெருக்கடி காரணமாக அவருக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
கொழும்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.
அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர் பின்னர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பினார்.
இலங்கையில் அந்நாட்டு அரசு சார்பில் அவருக்கு சிறப்பு பாதுகாப்பும், அரசு பங்களாவும் வழங்கப்பட்டது. அங்கு தங்கியிருந்தாலும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவருக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசு சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளிடம் கடன் கேட்டு வந்தது.
இந்த நெருக்கடிகள் காரணமாக கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதன்படி அவர் இலங்கையில் இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் வசிக்கும் கோத்தபய ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்கள் செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே நேற்று திடீரென இலங்கையில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டார். அவர் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன.
குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவார் எனவும் கூறப்படுகிறது.