ஃபாக்ஸ்கான் நிறுவனரின் அடுத்த இலக்கு - தைவான் அதிபர் தேர்தலில் போட்டி!
- இந்நிறுவனத்தை தொடங்கிய கவ், 2019ல் தலைமை பதவியை துறந்தார்
- இதுவரை அரசியலில் அவரால் பெரும் வெற்றி பெற முடியவில்லை
அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.
உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகம், ஜப்பான் நாட்டின் நிண்டென்டோ வீடியோ கேம் உட்பட உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.
தைவானின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 6வது இடத்தை பிடித்த டெர்ரி கவ், பல தசாப்தங்களாக பொது வெளியில் தனது கருத்துக்களை அஞ்சாமல் கூறும் வழக்கம் கொண்டவராக கருதப்படுகிறார்.
வெற்றி பெறுவதற்காக தனது தேர்தல் அறிக்கையில் அவர் கூறப்போகும் திட்டங்களை குறித்து யூகங்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.