உலகம்

ஜெர்மனியிடம் 3-வது இடத்தை பறி கொடுத்த ஜப்பான்

Published On 2024-02-15 10:32 GMT   |   Update On 2024-02-15 10:32 GMT
  • ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
  • ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது

கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.

உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.


மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

"சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News