காசா போர் தாக்குதல்: இந்தியாவை சார்ந்த ஐ.நா.ஊழியர் பலி
- தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
காசா:
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கி 6 மாதங்களை கடந்துவிட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் காசாவின் ரபா நகரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அவர் கொல்லப்பட்டார்.
அவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் (டி.எஸ்.எஸ்.) ஊழியர் ஆவார். பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் பயணித்த மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. பணியாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்தவும் அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, "காசாவில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பிடுவதற்காக ஐநா ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வழக்கமான வேலையின் ஒரு பகுதியாக இருவரும் காரில் மருத்துவமனைக்குச் சென்றனர். அது ரபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை. அவர்களது வாகனம் எப்படி தாக்கப்பட்டது என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்