உலகம்

கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட்

ஜெர்மனி பாதுகாப்புத் துறை மந்திரி ராஜினாமா

Published On 2023-01-16 23:12 GMT   |   Update On 2023-01-16 23:12 GMT
  • உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவை ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
  • உக்ரைன் வீரர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்படும் என ஜெர்மனி ராணுவ மந்திரி அறிவித்தார்.

பெர்லின்:

உக்ரைன், ரஷியா இடையிலான போரில் அமெரிக்காவும், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

இதற்கிடையே, ஜெர்மனி ராணுவ பெண் மந்திரியான கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் ஹெல்மெட்டுகளை வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.

ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிநவீன ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் வீரர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் ஜெர்மனி ராணுவ மந்திரியின் இந்த அறிவிப்பு கேலிக்குள்ளானது. சமூக வலைத்தளங்களில் பலரும் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட்டை கேலி செய்து பதிவுகளை வெளியிட்டனர்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் தனது மகனை ராணுவ ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றது விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, ஜெர்மனியின் ஆயுத படைகளை மேம்படுத்த தவறிவிட்டதாக கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் ராணுவ மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஒலாப் ஸ்கோல்சிடம் வழங்கியதாகவும், அவர் அதை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

Tags:    

Similar News