உலகம்

மருந்து ஜாம்பவான்களுக்கிடையே காப்புரிமை சண்டை: பைசர் மீது வழக்கு தொடர்ந்த பிரிட்டன் நிறுவனம்

Published On 2023-08-03 09:47 GMT   |   Update On 2023-08-03 09:47 GMT
  • தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
  • இந்நோய் அறிகுறிகளை விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்

நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ்.

இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

எனவே இதன் தாக்குதலிலிருந்து மனிதர்களை காக்க ஒரு தடுப்பூசியை கண்டு பிடிக்க உலகெங்கிலும் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

லண்டனை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு பிரிட்டன் மருந்து நிறுவனம் க்ளாக்ஸோ ஸ்மித்க்லைன் (GSK). இந்நிறுவனம் இந்த நோய்க்கு எதிராக அரெக்ஸ்வி எனும் தடுப்பூசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனுமதி பெற்று விட்டது.

இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் உள்ள டெலாவேர் மாநில நீதிமன்றத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் அமெரிக்க பன்னாட்டு முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மீது காப்புரிமை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

ஃபைசர் நிறுவனத்தின் அப்ரிஸ்வோ (Abrysvo) தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு, ஜிஎஸ்கே நிறுவனத்தின் 4 காப்புரிமைககளை மீறுவதாக ஜிஎஸ்கே குற்றம் சாட்டியுள்ளது.

"ஃபைசர் நிறுவனம் தெரிந்தே அப்ரிஸ்வோ தடுப்பூசியில் எங்களுக்கு உரிமையுள்ள கண்டுபிடிப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துகிறது. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வி (Arexvy), ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 7 வருடங்களுக்கு முன்பே வளர்ச்சியில் இருந்தது. இவ்விவகாரத்தில் ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம். காப்புரிமை மீறலின் விளைவாக நாங்கள் இழந்த லாபங்கள் மற்றும் ராயல்டிகள் உட்பட பண நஷ்டத்திற்கும் ஈடு வேண்டும். மேலும் ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்புகள்தான் நிறுவனங்களின் புதுமையான ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அடிப்படை. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வியை அறிமுகப்படுத்துவது தடையின்றி நடைபெற வேண்டும்" என ஜிஎஸ்கே தன் புகாரில் கோரியுள்ளது.

"எங்கள் அறிவுசார் சொத்துக்களின் நிலைப்பாடுகளில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நோயாளிகளை காக்க எங்களின் புதுமையான தடுப்பூசியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் நிலையை தற்காத்துக் கொள்ள நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்" என ஃபைசர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News