உலகம்

ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர் பலி - இஸ்ரேல் பாதுகாப்புப்படை தகவல்

Published On 2023-10-14 07:22 GMT   |   Update On 2023-10-14 07:39 GMT
  • லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
  • ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையதாக மேற்கு கரையில் 230 பேரை இஸ்ரேல் பாதுகாப்புப் படை கைது செய்தது.

டெல் அவிவ்:

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து இன்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டரின் பெயர் மெராத் அபு மெராட் என அறிவித்துள்ளது.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் பயங்கரமான தாக்குதலை இவர்தான் வழிநடத்தினார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விமானப்படை ஆளில்லா வான்வழி தாக்குதல் மூலம் ஊடுருவ முயன்றவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

பாலஸ்தீன மேற்கு கரையில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி வருகிறது. அப்போது தாக்குதலும் நடத்தப்படுகிறது.

ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையதாக மேற்கு கரையில் 230 பேரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News