உலகம்

வானிலை மாற்றம்.. போர்.. ஏற்றுமதி தடையால் கதிகலங்க வைக்கும் உணவு நெருக்கடி: விழிக்கும் உலக நாடுகள்

Published On 2023-07-22 15:48 GMT   |   Update On 2023-07-22 15:48 GMT
  • எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
  • அதிக லாபம் பெறும் எண்ணத்தில் வர்த்தகர்கள் தானியங்களை பதுக்குவதும் நடக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக வானிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து சீனா வரை கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது உள்நாட்டில் அரிசி விலையேற்றத்தை தவிர்க்க, அனேக வகை அரிசி ரகங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்திருக்கிறது.

போர் காரணமாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கோதுமை, சோளம் உட்பட தானிய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் 'கருங்கடல் ஒப்பந்தம்' எனும் உடன்படிக்கையிலிருந்து ரஷியா வெளியேறியது.

எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் கடுமையாகியிருக்கிறது. இது இன்னும் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க உலகின் பல நிறுவனங்களில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது.

இது போன்ற காரணங்களால் உணவு பொருட்களின் கையிருப்பு குறைவதும், அவற்றின் விலை பன்மடங்காக அதிகரிப்பதும், அதிக லாபம் பெறும் எண்ணத்தில் வர்த்தகர்கள் தானியங்களை பதுக்குவதும் நடக்கலாம் என்றும், இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் உணவு நெருக்கடியை சந்திக்க நேரும் அபாயம் உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வெப்பத்தால் தொடர் வறட்சி, பெருமழையால் வெள்ளம் என வானிலை மாறுதல்கள் மாறி மாறி நிகழ்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். ஐரோப்பாவில் பசு மாடுகள் மிக குறைவாக பால் சுரக்கின்றன.

இவை போன்ற சாதகமற்ற காரணிகள் மாறும் வரை இத்தகைய சூழல் தொடரும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Tags:    

Similar News