வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் - லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்பு
- காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
- இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பெய்ரூட்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனான் நாடும் தாக்குதலில் குதித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வரு கிறது.
இந்நிலையில், வடக்கு இஸ்ரேலில் லெபனான் தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியாவின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பான கோலன் குன்றுகள் மீதுள்ள 3 இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதுதொடர்பாக லெபனான் ஆயுத குழுவான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கூறுகையில், வடக்கு இஸ்ரேலில் குண்டு-ஏவுகணை தாக்குதலை நடத்தினோம். ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் ஷெபாபார்ம்ஸ் பகுதியில் உள்ள 3 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தளங்களை குறிவைத்து தாக்கினோம். பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனானின் தாக்குதலையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறுகையில், இஸ்ரேல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து லெபனானில் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டு வருகிறது.