வடக்குப் பகுதிக்கு மக்களை... இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் சபதம்
- பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு தண்டனை வழங்கப்படும்.
- இஸ்ரேல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இரண்டு நிமிடங்களில் கொல்ல விரும்பியது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்களை மீண்டும் வடக்கு பகுதிக்கு பாதுகாப்பாக திரும்ப வைப்பதுதான் எங்களது புதிய இலக்கு என இஸ்ரேல் தெரிவித்தது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ஹிஸ்புல்லாவின் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. இதில் 32 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு போரின் மையப்பகுதி வடக்குப்பகுதியை நோக்கி நகர்கிறது என இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் காசா மீதான தாக்குதலை நிறுத்தாமல், வடக்கு பகுதிகளில் மக்களை திரும்ப வைக்க இஸ்ரேலால் முடியாது என ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் ஹஸ்ரல்லா கூறியதாவது:-
பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு தண்டனை வழங்கப்படும். இந்த தாக்குதல் இனப்படுகொலையாகும். இது போர் குற்றம் அல்லது போர் அறிவிப்பாகும். இஸ்ரேல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இரண்டு நிமிடங்களில் கொல்ல விரும்பியது.
காசா மீதான தாக்குதலை நிறுத்தும் வரை, இஸ்ரேலால் வடக்குப் பகுதியில் மீண்டும் மக்களை பாதுகாப்பாக குடியமர்த்த முடியாது.
இவ்வாறு ஹஸன் ஹஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. முக்கிய ஹிஸ்புல்லா கமாண்டர்களை வான்தாக்குதல் மூலம் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.