உலகம்

இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

Published On 2024-10-22 23:30 GMT   |   Update On 2024-10-22 23:30 GMT
  • இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
  • லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெருசலேம்:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில், லெபனானில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்திருந்தது.

கடந்த 19-ந்தேதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தனர். அந்த 2 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய இஸ்ரேல் மீது வீசப்பட்ட 5 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், ஒரு ராக்கெட் திறந்தவெளி பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே போல், டெல் அவிவ் நகரத்தின் மீதும், வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளின் மீதும் சுமார் 20 ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதே சமயம், ஒரு குடியிருப்பு கட்டிடம் மற்றும் சில வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலில் உள்ள ஹைபா, கிலிலாட் பகுதிகளில் செயல்பட்டு வரும் மொசாட் தலைமையகம் மற்றும் சைபர் உளவுத்துறை பிரிவு ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News