ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: இங்கிலாந்து கப்பலில் எரிந்த தீயை அணைக்க உதவிய இந்திய போர்க்கப்பல்
- இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
- 10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வர்த்தக கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏடன் வளைகுடா பகுதியில்இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். உடனே ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலில் 22 இந்தியர்கள் உள்ளனர். கப்பலில் எரிந்த தீயை கடுமையாக போராடி இந்திய மீட்புக்குழுவினர் அணைத்தனர்.
10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது. எண்னை கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத் கூறும்போது, இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்த தீயை எதிர்த்து போராடும் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தீயை அணைக்க இந்திய கடற்படை எங்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி என்றார்.