"நான் பிரதமராக வேண்டும் என்றால்..." - பிலாவல் பூட்டோ
- பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது
- 2 வருடங்கள் என்னை பிரதமராக்க ஆதரவு தருவதாக கூறினார்கள் என்றார் பூட்டோ
பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் பிலாவல்-பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சி (PTP) மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) ஆகிய கட்சிகள் களமிறங்கியதால் மும்முனை போட்டி நிலவியது.
இதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (PTP) கட்சியை சேர்ந்த பல சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், இத்தேர்தல் முடிவுகளில் எவருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
தற்போது வரை பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது.
தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் ஷரீஃபும் ஆட்சியமைப்பது குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சிந்து மாகாணத்தில், தட்டா நகரில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
முதல் 3 வருடங்கள் அவர்கள் தரப்பில் பிரதமராக ஒத்து கொண்டால், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை.
எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை.
நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்.
அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் நலனை மறந்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு பிலாவல் கூறினார்.
தேர்தல் முறையாக நடைபெறவில்லை என இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.