கழுதையில் அழைத்துச் செல்வேன் - வெனிசுலா அதிபருடன் சண்டை செய்யும் மஸ்க்.. தடிக்கும் வார்த்தைப் போர்
- மதுரோ ஒரு சர்வாதிகாரி என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
- குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். மதுரோ ஒரு சர்வாதிகாரி, அங்கு நடந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்து என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
மஸ்கின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியின் நடந்த விவாதத்தின்போது பதிலளித்த நிகோலஸ் மதுரோ, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உங்களைக் கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார்.
இதனால் ட்ரிகரான எலான் மஸ்க், சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன் என்றார். மேலும், 'நான் உங்களிடம் வருகிறேன் [I'm coming for you], உங்களை கிட்மோவுக்கு கழுதையில் அமர்த்தி அழைத்துச் சொல்லப்போகிறேன் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கிட்மோ [Gitmo] என்பது கரீபிய கடலில் கியூப பகுதியில் அமைந்துள்ள குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும். முன்னதாக மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பார்கையும் மஸ்க் சண்டைக்கு அழைத்து குறிப்பிடத்தக்கது.