உக்ரைனுக்கு படைகளை அனுப்ப முன்வந்தால்... பிரான்ஸ் மந்திரியிடம் எச்சரித்த ரஷியா
- மேற்கத்திய துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதை புறந்தள்ளி விட முடியாது- மேக்ரான்
- பிரான்ஸ் முடிவு தனக்குத்தானே பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதாகும்- ரஷிய மந்திரி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகின்றன. ஆயுதங்கள் கொடுத்து பக்கபலமாக இருந்து வருகின்றன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதை புறந்தள்ளி விட முடியாது என தெரிவித்திருந்தார். இதன்மூலம் தேவைப்பட்டால் பிரான்ஸ் உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்கெய் சோய்கு, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி செபஸ்டியன் லெகோர்னு உடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.
அப்போது செர்கெய் "பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஏற்கனவே அறிவித்தபடி, பிரான்ஸ் அதை பின்பற்றினால், அது பிரான்ஸ் தனக்குத்தானே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வதாகும்" என செபஸ்டியன் லெகோர்னுவிடம் எச்சரித்துள்ளார்.
மேலும், "உக்ரைன் மேற்கத்திய நாடுகளில் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை. பிரான்ஸ் சிறப்பு துறைககள் ஈடுபடாது என நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷியா உடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ள நிலையில் ரஷிய பாதுகாப்பு மந்திரி அரிதாக பிரான்ஸ் மந்திரியுடன் பேசியுள்ளார்.
2022 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு மந்திரிகளும் முதன்முறையாக தற்போது பேசியுள்ளனர்.