உலகம்

உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்: பிரதமர் மோடி

Published On 2024-10-22 13:25 GMT   |   Update On 2024-10-22 13:25 GMT
  • பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றார்.
  • ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாஸ்கோ:

பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.

இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியாவின் கசானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், ரஷிய அதிபருடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியதாவது:

உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே நமது அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களில் தனது 2-வது ரஷிய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News