அமெரிக்காவில் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்தியர் நியமனம்
- அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது.
- செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவளித்தனர்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல் அருண் சுப்பிரமணியன் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு இறுதியில் நியமித்தார். இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபையின் ஒப்புதல் அவசியமாகும்.
இந்த நிலையில் அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக செனட்சபையில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் 58 உறுப்பினர்கள் அருண் சுப்பிரமணியனை நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 37 பேர் எதிராக வாக்களித்தனர்.
அதை தொடர்ந்து அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாகும் முதல் தெற்காசிய வம்சாவளி என்கிற பெருமையை அருண் சுப்பிரமணியன் பெறுகிறார்.
1970-களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தம்பதிக்கு 1979-ல் பிறந்த அருண் சுப்பிரமணியன், 2001-ல் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து 2004-ம் ஆண்டு, கொலம்பியா சட்டப் பள்ளியில் சட்டப் பட்டம் பெற்றார். அதன் பின்னர், சட்டப் பள்ளி மாணவர்களால் நடத்தப்படும் கொலம்பியா லா ரிவியூ பத்திரிகையின் நிர்வாக கட்டுரை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது சுஸ்மன் காட்ப்ரே எல்எல்பி என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் அவர், 2007 முதல் அங்கு பணியாற்றி வருகிறார்.