பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
- ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
- அம்ரித்பால் சிங்கை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:
காலிஸ்தான் ஆதவாளர்கள் சமீப காலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அம்ரித்பாலை விடுதலை செய்ய வேண்டும் என கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பெயிண்டால் எழுதி உள்ளனர். தூதரகத்தை ஒரு கும்பல் தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்தி சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பி ஓடிய அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துவிட்டதாகவும், அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் இமான் சிங் காரா குற்றம்சாட்டி உள்ளார். அம்ரிம் பால் சிங்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.