இலங்கை போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இந்தியா ராணுவத்தை அனுப்புகிறதா?... தூதரகம் விளக்கம்
- அதிபர், பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
- இலங்கை நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக, வெளியிறவுத்துறை அமைச்சகம் தகவல்.
கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் நேற்று இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி உள்ள போராட்டக்காரர்கள் குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர்.
இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையிலும் அவரது விட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
இலங்கையில் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்தியா ராணுவத்தை அனுப்ப உள்ளதாக சமூக வலைதங்களில் வெளியான தகவல்களை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று இந்திய தூதரக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.