அமெரிக்காவில் மகனை கழுத்து அறுத்து கொன்ற இந்திய வம்சாவளி பெண்
- சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.
- தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தியாவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜூ. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதி தங்களது மகனுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு இத்தம்பதி விவாகரத்து பெற்றனர். இதில் மகனை பிரகாஷ் ராஜூ பராமரிப்பில் வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், சிறுவனை தாய் சரிதா குறிப்பிட்ட நாட்கள் தன்னுடன் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா தனது 11 வயது மகனை கலிபோர்னியாவின் சாண்டாஅனாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். இதற்காக அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சரிதா போலீசுக்கு போன் செய்து தனது மகனை கொன்றுவிட்டு தான் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் ஓட்டல் அறைக்கு சென்றபோது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மகனை, பிரகாஷ் ராஜூவிடம் ஒப்படைக்கும் நாளில் அவனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு சரிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மகனை தான் வளர்க்க சரிதா விரும்பிய நிலையில் அது தொடர்பாக முன்னாள் கணவருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரிதாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பிரகாஷ் ராஜூக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டி னார். ஆனால் அதை பிரகாஷ் ராஜூ மறுத்து உள்ளார்.