இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கையில் தலையிடக்கூடாது: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
- சிரியாவின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.
- இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரித்தது.
டெஹ்ரான்:
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது. இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.