உலகம்

ஈரானின் 14 வது அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2024-05-21 06:23 GMT   |   Update On 2024-05-21 06:23 GMT
  • அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது.
  • ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார்.

ஈரானின் 14 வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அவருடன் வந்த முக்கிய அரசு உறுப்பினர்கள் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

மோசமான வானிலைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு மீட்டுப்படை சென்றது. பின் இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது. விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் தற்காலிக அதிபராகத் துணை அதிபர் முகமது மொக்பர் பதவியேற்றார். இந்நிலையில் ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் முகமது மொக்பர், நிதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி-எஜே மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது டெஹ்கான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் தேதி தீர்மானிக்கப்பட்டது.

 

ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார். இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இந்தியா இன்று (மே 21) துக்க தினம் அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News