முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார்: உறுதிப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்
- ஜூலை 17-ந்தேதி முகமது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
- வான் தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், முகமது டெய்ஃப் கொல்லப்பட்டரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்திய நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
காசாவின் தெற்கு நகரான ரஃபாவைத் தவிர மற்ற நகரங்களை அடையாளம் தெரியாத அளவிற்கு இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் சின்னாபின்னமாக்கியுள்ளது.
இதில் ஒரு நகரம்தான் கான் யூனிஸ். கான் யூனிஸ் நகரில் எங்களுடைய நோக்கம் முடிவடைந்தது என இஸ்ரேல் தெரிவித்து, இந்த நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலஸ்தீனர்கள் குடியேறலாம் என பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது.
இதற்கிடையே பாலஸ்தீன மக்களுடன் ஹமாஸ் அமைப்பினரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
இந்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி கான் யூனிஸ் நகரம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. முகமுது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவர் மறைந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த கூடாரங்கள் வசித்து வந்த 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் முகமது டெய்ஃப் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தவில்லை, ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை. இவர்தான் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டடார்.
இந்த நிலையில்தான் புலனாய்வு மதிப்பீட்டின்படி வான் தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் வான்தாக்குதல் மூலம் கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளது.
தலைவர் கொல்லப்பட்ட இரண்டு நாளில் முக்கிய தலைவர் தாக்குதலில் உயிரிழந்தார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது ஹமாஸ் அமைப்பினருக்கு போரில் அடுத்தடுத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.