உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படுமா? புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட பைடன்

Published On 2023-03-15 14:58 GMT   |   Update On 2023-03-15 14:58 GMT
  • துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
  • அதிபயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது, துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி குறித்த விசாரணைகள் மற்றும் சோதனைகளை விரைவுபடுத்தும் புதிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

அத்துடன், துப்பாக்கி சூடு நடந்த மான்டேரி பார்க் சென்று, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிபயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

பைடன் அறிவித்துள்ள புதிய நடவடிக்கைகளின் மூலம், இனி பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகே துப்பாக்கிகள் விநியோகிக்கப்படும். துப்பாக்கியை ஒருவர் வாங்கும் முன்பு, அவர் குற்றவாளியா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை செய்பவரா என்பதை பார்த்த உடன் கண்டுபிடித்து விடலாம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தடை சட்டத்திற்கு பைடன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், பாராளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் ஆதரவில்லாததால் சட்டம் இயற்றுவதில் சிக்கல் உள்ளது. 

Tags:    

Similar News