உலகம்

கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு - மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவல்

Published On 2024-07-02 02:27 GMT   |   Update On 2024-07-02 02:27 GMT
  • நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கென்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார்.

 


இந்த நிலையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட இருந்த புதிய வரி உயர்வு தொடர்பான சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் உயிரிழந்ததாகவும் 361 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜூன் 18 ஆம் தேதி துவங்கி ஜூலை 1 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதே காலக்கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 32 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் 627 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News