உலகம்

ரஷியா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வடகொரியா அதிபர்

Published On 2023-09-17 23:01 GMT   |   Update On 2023-09-17 23:01 GMT
  • ரஷியா சென்ற கிம் ஜாங் அன் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • ரஷிய சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் கிம் ஜாங் அன் நேற்று வடகொரியா திரும்பினார்.

பியாங்யாங்:

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ரஷியா சென்றார். அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர்.

அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டார்.

இந்தப் பயணத்தில் அதிபர் புதின், ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ உயர் அதிகாரிகளை கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசினார். விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்ற அவர்கள், ரஷியாவின் ராணுவ திறன்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கம் அளித்தனர். ரஷியாவின் முக்கிய விண்வெளி தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார்.

மேலும் ரஷியாவுக்கு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம், ராணுவத்துக்கு இடையேயான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது 6 நாள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார்.

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கிம் ஜாங் உன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News