உலகம்

அது பொய் தகவல்.. டிரம்ப் எங்களுக்கு போன் பண்ணவே இல்லை.. ரஷியா

Published On 2024-11-11 11:57 GMT   |   Update On 2024-11-11 11:57 GMT
  • உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறப்பட்டது.
  • விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசவே இல்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அசத்தினார். அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் உரையாடினர் என்று கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து வெளியான தகவல்களில் டொனால்டு டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் மற்றும் அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசவே இல்லை என்று ரஷியா தெரிவித்து உள்ளது.

மேலும், இருநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறும் போது "இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்," என்று தெரிவித்தார். மேலும், ரஷிய அதிபர் மற்றும் டொனால்டு டிரம்ப் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்தார் என்றும் இருவரும் கடந்த வியாழன் கிழமை உரையாடினர் என்றும் கூறப்பட்டது.

முன்னதாக டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபரான எலான் மஸ்க் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் உரையாடியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News