இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயக்க கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்குமா?
- 225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
- பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற மறுநாளே இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்து பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அனுர குமார திசா நாயக்காவின் அனுர குமார திசநாயக்க தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 4 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்க, சஜித பிரேமதாச, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதேபோல தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. அதே வேளையில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். சிறப்பு மெஜாரிட்டி கிடைத்தால் தான் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே அதிபர் அனுர குமரா திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.