இலங்கை பாராளுமன்ற தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
- ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த, கோத்தபய, சமல் மற்றும் பசில் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
- 225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த பாராளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தன. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் தேவை என்பதால் பாராளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலை நடத்த அனுரா குமர திசநாயகா முடிவு செய்தார். அதன்படி அதிபராக பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்தார். அதனை தொடர்ந்து நவம்பர் 14-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள் களம் காண்கின்றன.
அதே சமயம் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் அதிபர் தேர்தலில் திசநாயாகவிடம் தோல்வியடைந்த ரணில் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1977-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல்முறையாகும்.
அதேபோல ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த, கோத்தபய, சமல் மற்றும் பசில் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் இருந்த ஏராளமான மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றிப் பெற வேண்டும். அதேநேரத்தில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் 'சிறப்பு பெரும்பான்மை' கிடைக்கும்.
சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் காலை 7 மணிக்கு பாராளுமன்ற தேர்தல் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தேர்தலை பாதுகாப்பாக நடத்த நாடு முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 17 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.