உலகம்

நாங்கள் தாக்கியிருந்தால்... டிரோன் வீடியோவுடன் தொடர்ந்து மறுக்கும் இஸ்ரேல் ராணுவம்

Published On 2023-10-18 09:27 GMT   |   Update On 2023-10-18 09:27 GMT
  • காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது யார்?
  • இஸ்ரேல் ராணுவம்- பாலஸ்தீன அமைப்பு பரஸ்பர குற்றச்சாட்டு

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்றிரவு காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்களால் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தென்பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அகதிகளாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகளுடன் அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியது என்று பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், நாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை. பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் (Islamic Jihad) அமைப்புதான் ஏவுகணை தாக்குதலின்போது தவறாக கையாண்டு தாக்கு நடத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு பொறுப்பு ஏற்கவில்லை. இஸ்ரேல் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இந்த நிலையில், டிரோன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், எங்கள் தாக்குதல் இதுபோன்று சேதத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவை சுட்டிக்காட்டிய இஸ்ரேல் ராணுவம், நாங்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியிருந்தால் அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருக்கும். ஆனால், மருத்துவமனையில் அப்படி பள்ளம் ஏற்படவில்லை.

எங்கள் தாக்குதலில், மிகப்பெரிய அளவில் தீப்பற்றி எரியும் சம்பவம் இருக்காது. ஆனால், மருத்துவமனையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அதிக அளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

எங்கள் தாக்குதலின்போது துண்டு துண்டான கூரைகள் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும். அதுபோன்று இல்லாமல் பக்கத்து கட்டங்களில் பெரிய பெரிய துண்டுகளாக அப்படியே உள்ளன.

இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இருவரின் உரையாடலை இடைமறித்த ஆடியோவையும் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News