தென்கொரியா, சீனா, ஜப்பான் இடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
- 2008-ம் ஆண்டில் இருந்து மூன்று நாடுகளுக்கு இடையிலான மாநாடு நடைபெற்று வருகிறது.
- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2019-க்குப் பிறகு நடைபெறவில்லை.
தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாட்டு தலைவர்கள் வருகிற திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தென்கொரியா தெரிவித்துள்ளது. கடைசியாக இந்த மூன்று நாடுகள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை 2019-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் நான்கு வருடங்கள் கழித்து தற்போது நடைபெற இருக்கிறது.
இந்த முத்தரப்பு சந்திப்பில் அவர்களுடைய ஒத்துழைப்பு புதுப்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2019-ம் ஆண்டுக்குப்பின் நடத்தப்படவில்லை.
இந்த முத்தரப்பு பேச்சுவார்தை தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இடையில் நடைபெற இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தென்கொரியா செல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் தென்கொரிய அதிபரை சந்திக்கிறார்கள். அதன்பின் முத்தரப்பு மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
சீனாவுடன் ஜப்பான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை மாற்றம், வணிகம், சுகாதாரம், டெக்னாலாஜி மற்றும் பேரழிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.